ARTICLE AD BOX
மயங்கி விழுந்த விஷால்
உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருநங்கைகளுக்கான பிரத்யேக திருவிழாவாக காலம் காலமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தும் கலந்துகொள்வது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக நேற்று விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ பொன்முடி, நடிகர் விஷால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சிறப்புரையாற்றிய விஷால் திடீரென மயங்கி விழுந்தார். விஷால் மயங்கி விழுந்தது அந்த இடத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

என்ன காரணம்?
இந்த நிலையில் விஷால் மயங்கி விழுந்தது குறித்தான காரணத்தை விஷாலின் மேனேஜரிடம் கேட்டறிந்ததாக ஒற்றன் துரை என்பவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், விஷால் நேற்று மதியம் உணவருந்தவில்லை எனவும் வெறும் பழச்சாறு மட்டுமே குடித்தார் எனவும் இந்த காரணத்தினால்தான் அவர் மயங்கி விழுந்தார் எனவும் கூறியுள்ளார். எனினும் விஷாலின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
