ARTICLE AD BOX
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அடுத்த பாலையம்பட்டி புளியம்பட்டி நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (40). இவர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி ராமலட்சுமி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில், துரைமுருகன் கடந்த மார்ச் 5ஆம் தேதி வீட்டில், உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், துரைமுருகன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையைத் துவங்கி உள்ளனர். இதில், துரைமுருகன் அமரர் ஊர்தியில் பணிபுரிந்தபோது நீண்ட நாட்களாக ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார்.இதனை அறிந்த மனைவி ராமலட்சுமி, அவரைக் கண்டித்துள்ளார். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் துரைமுருகன் அந்தப் பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் கணவரை வெறுப்பேற்றுவதற்காக ராமலட்சுமி, தனது உறவினரான சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரராக உள்ள விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெயகணேஷ் (35) என்பரிடம் தொடர்பில் இருப்பது போல, அடிக்கடி வீடியோ கால் பேசியுள்ளார். இந்த பிரச்னையில் ஜெயகணேஷை தொடர்பு கொண்ட துரைமுருகன், அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!
இதனால் ஆத்திரமடைந்த ஜெயகணேஷ், விடுமுறையில் வந்து, கடந்த 5ஆம் தேதி துரைமுருகன் வீட்டிற்குச் சென்று அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ஜெயகணேஷை நேற்று கைது செய்தனர்.