ARTICLE AD BOX
தொடர் தோல்விகள்
ஒரு காலகட்டத்தில் ஷங்கர் திரைப்படங்கள் வந்தாலே தமிழகமே களைகட்டும். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம், ஹாலிவுட்டிற்கு நிகராக படம் எடுப்பவர் ஷங்கர் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்கள் மிகவும் மோசமான விமர்சனங்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் படு தோல்வியையும் சந்தித்தது. இந்த தொடர் தோல்விகளால் ஷங்கர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். “இயக்குனர் ஷங்கர் முன்பு போல் இல்லை, பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என கதையில் கோட்டை விட்டுவிடுகிறார்” என விமர்சனங்கள் பறக்கின்றன.

இது என்னுடைய கனவுப்படம்!
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” என்ற பிரம்மாண்ட சரித்திர நாவல் “பொன்னியின் செல்வன்” நாவலையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நாவலாகும். இந்த நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்கவுள்ளார். இந்த நிலையில் “வேள்பாரி” நாவல் ஒரு லட்சம் பிரதிகளை தாண்டி சாதனை படைத்த நிலையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வேள்பாரி நாவலின் வெற்றி விழா நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த், ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று இவ்விழாவில் பேசிய ஷங்கர், “எனது முதல் கனவுப்படமாக எந்திரன் இருந்தது. தற்போது எனது கனவு திரைப்படம் வேள்பாரி” என கூறியிருந்தார்.
ஷங்கர் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், “இது வரைக்கும் உடைச்ச ஃபர்னிச்சரே போதும்” என்பது போல் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். “பொன்னியின் செல்வன் நாவலை படமெடுத்து சோலியை முடித்தது போதும், வேள்பாரியையாவது விட்டு வையுங்கள்” என கோரிக்கை வைத்து வருகின்றனர். எனினும் பலர் ஷங்கர் நிச்சயம் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக எடுப்பார் என அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.