ARTICLE AD BOX
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாக கூழு கூட்டத்தில் பேசியபோது, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியிருந்தார். இது பேசுபொருளாக ஆன நிலையில் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த முகநூல் பதிவில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை.
கடந்த 09 06 25 புதன்கிழமை அன்று திராவிட ரத்னா தமிழினக் காவலர் நான் உயிராக நேசித்த என் அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார். சான்றோர் பெருமக்களே நான் மாத்தையா போன்று துரோகியா? நீதி சொல்லுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறிய அவர், “அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் தன் மகன் துரை எம்பி அவர்களின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சித் தலைவர் திரு வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்ட கடந்த 09. 07. 25 தொடங்கி 13. 07. 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கத்தை தொலைத்து விட்டேன்.
என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே. அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே. அன்புத் தலைவர் திரு வைகோ அவர்களே, அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான்” என மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டுள்ளார் மல்லை சத்யா.
